ஆர்.கே.பேட்டை அருகே 2 வாலிபர்கள் கொலை வழக்கில் நீதி விசாரணை கேட்டு கிராம மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
2 வாலிபர்கள் கொலை வழக்கில் நீதி விசாரணை கேட்டு கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை புதூர் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (வயது 22), பிரசாந்த் (23). கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இவர்கள் கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் அவரது நண்பர் பரத்வாஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.கே. பேட்டை அருகே சித்தூர் செல்லும் சாலையில் வெடியங்காடு என்ற இடத்தில் 2 வாலிபர்கள் கொலை வழக்கில் நீதி விசாரணை தேவை என்று கிராம மக்கள், உறவினர்கள் என்று 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை. தங்களுக்கு நீதி வேண்டும், நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
தகவல் கிடைத்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.