நவல்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் ப.குமார் வாக்குறுதி
நவல்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமைக்கப்படும் என்பதை வாக்குறுதியாக உங்களுக்கு அளித்து கொள்கிறேன்.
திருச்சி,
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த ப.குமார் தொகுதி முழுவதும் தெருத்தெருவாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர், மேலகல் கண்டார்கோட்டை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:& கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2011-ம் ஆண்டு தமிழகம் இருந்த நிலையை எண்ணிப்பாருங்கள். ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் கடும் மின்வெட்டு இருந்தது. ஜெயலலிதா ஆட்சி அமைந்ததும் மின்வெட்டை சரி செய்து மின் மிகை மாநிலம் ஆக்கினார். அவரது வழியில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறார். திருவெறும்பூர் பகுதியில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நிறைவேற்றி கொடுத்து இருக்கிறேன். அதை எண்ணிப் பாருங்கள். உங்கள் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுக்க எனக்கு வாக்களியுங்கள்.
நவல்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமைக்கப்படும் என்பதை வாக்குறுதியாக உங்களுக்கு அளித்து கொள்கிறேன். ஜெயலலிதா ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாயை வழங்கினார். இந்த ஆண்டு அதனை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கினார். நாடு வளம் பெற இந்த தொகுதியில் உங்கள் தேவைகள், அடிப்படை வசதிகள், பிரச்சினைகள் தீர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். அவருடன் மாவட்ட துணை செயலாளர் சாந்தி, பகுதி செயலாளர்கள் பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், பாலசுப்ரமணியன், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் உள்பட ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள், த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றிருந்தனர்.