பொள்ளாச்சியில் தி.மு.க. கூட்டத்தை வீடியோ எடுத்த அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு
பொள்ளாச்சியில் நடந்த தி.மு.க. கூட்டத்தை வீடியோ எடுத்த அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த தி.மு.க. கூட்டத்தை வீடியோ எடுத்த அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அறிமுக கூட்டம்
பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. வேட்பாளர் வரதராஜன் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு வந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு பலாகாரங்கள் மற்றும் ஜூஸ் போன்றவை வழங்கப்பட்டது. இதை தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் வீடியோ குழுவை சேர்ந்த அதிகாரிகள் கேமரா மூலம் பதிவு செய்தனர்.
அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு
இதை பார்த்த தி.மு.க.வினர் சிலர் அவர்களை சூழ்ந்து தடுத்ததுடன், கூட்டத்தில் எடுத்த வீடியோ பதிவுகளை அழிக்குமாறு கூறினர். அதற்கு அதிகாரிகள் அரசியல் கட்சியினரின் கூட்டங்களை வீடியோ எடுப்பது தான் எங்கள் வேலை என்றனர்.
அதற்கு அடையாள அட்டை இருந்தால் காண்பிக்குமாறு கூறி தி.மு.க. வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற் கிடையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வந்து அதிகாரிகளை தடுக்க கூடாது என்று பிரச்சினைக்கு முடிவுக்கு கொண்டு வந்தனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதன் கூறுகையில், அரசியல் கட்சியினரின் தேர்தல் செலவினங்கள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டு உள்ளது.
கண்காணிப்பு குழுவினர் அரசியல் கட்சிகளின் பிரசாரம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை வீடியோ பதிவு செய்வார்கள். அவர்களை தடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.