புஞ்சைபுளியம்பட்டி முனியப்பன் கோவில் தீப்பிடித்து எரிந்தது
புஞ்சைபுளியம்பட்டியில் முனியப்பன் கோவில் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி காவிலிபாளையம் ரோட்டில் உள்ள தில்லை நகரில் ஓலை கொட்டகையில் முனியப்பன்சாமி கோவில் அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முனியப்பன் கோவில் ஓலைக்குடிசையில் திடீரென தீப்பிடித்தது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அதனால் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். எனினும் கொட்டகை முழுவதும் எரிந்தது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.