நெல்லையில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

நெல்லையில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-03-16 21:54 GMT
நெல்லை:
உலகம் முழுவதும் கடந்த 2010-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்தது. இதையொட்டி கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதனால் தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளனர்.

இதையொட்டி பொதுமக்கள் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நெல்லையில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுப்படி சுகாதாரத்துறையினர் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். நேற்று மாலை நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகில் முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் நடந்து வந்த பொதுமக்களை சந்தித்து முககவசம் அணிந்து செல்லுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுதவிர பெரிய வணிக வளாகங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்