சேலம் சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி ஆஸ்பத்திரியில் அனுமதி
சேலம் சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.;
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவரை கடந்த மாதம் திருட்டு வழக்கில் நல்லிபாளையம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவருடைய அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் சிம்கார்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜ்குமார் தனி அறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் அறை கதவின் கம்பியில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் ராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.