சிக்கனம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

ஓமலூர் அருகே சிக்கனம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.;

Update:2021-03-17 02:49 IST
ஓமலூர்:
ஓமலூர் அருகே சிக்கனம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி மற்றும் தும்பிபாடி ஊராட்சிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக மேட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
குடிநீர் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தர்மபுரி-சேலம் மெயின் ரோட்டுக்கு நேற்று காலையில் திரண்டு வந்தனர். சிக்கனம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய அனுமதி இல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டதை போலீசார் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மக்கனில் சிலர், ரோட்டில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அருகில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக அமைக்கப்பட்டு இருந்த பந்தல் மீது ஏறி வாலிபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த தும்பிபாடி பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து சிக்கனம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.  உடனே ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்