முசிறி, திருச்சி, திருவெறும்பூரில் வியாபாரி, டிரைவர்களிடம் ரூ.10½ லட்சம் பறிமுதல்
முசிறி, திருச்சி, திருவெறும்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வியாபாரி, டிரைவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.10½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
முசிறி,
முசிறி, திருச்சி, திருவெறும்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வியாபாரி, டிரைவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.10½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் என்று அமைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சுற்றி வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், முசிறியில் சேலம் சாலையில் சந்தபாளையம் பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சரக்கு ஆட்டோ
அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், சரக்கு ஆட்டோவை ஓட்டிவந்த திருச்சி எட்டரை பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 55) ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 800 வைத்திருந்தார். விசாரணையில் சேலம் மார்க்கெட்டில் புளி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கச்செல்வதாக அவர் கூறினார். ஆனால், அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து முசிறி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதுபோல் தொட்டியம் அருகே சேலம் சாலையில் ஏலூர்பட்டி பஸ்நிறுத்தம் அருகில் பறக்கும்படை அதிகார்கள் சோதனை நடத்தினர். அப்போது, சரக்கு வேனில், உரிய ஆவணங்கள் இன்றி ஈரோட்டை சேர்ந்த டிரைவர் தினேஷ்குமார்(23), திருச்சியில் வாழைக்காய் இறக்கிவிட்டு கொண்டு வந்த ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கல்லூரி பணம் சிக்கியது
திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் ஒரு பையில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.
காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், தனியார் கல்லூரிக்கான பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வியாபாரியிடம் சிக்கிய பணம்
இதுபோல் திருவெறும்பூர் அருகே சோதனை சாவடியில் பட்டுக்கோட்டையை சேர்ந்த வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.99 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் திருச்சி விமான நிலையம், உடையான்பட்டி ரெயில்வேகேட், கரூர் சாலை அருகே உள்ள சோதனை சாவடி மற்றும் காவிரி பாலத்தில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாததால், லாரி டிரைவரிடம் இருந்து ரூ.90 ஆயிரம், 2 கார் டிரைவர்களிடம் ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.