சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூத்தட்டு ஊர்வலம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து அதிகாரிகள், அறங்காவலர்கள், ஊழியர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக நேற்று எடுத்து சென்றனர்.

Update: 2021-03-16 20:48 GMT
ஸ்ரீரங்கம்,
சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து அதிகாரிகள், அறங்காவலர்கள், ஊழியர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக நேற்று எடுத்து சென்றனர்.

பூச்சொரிதல் விழா

சக்தி தலங்களில் மிகவும் புகழ் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடிவருவோர் மட்டுமின்றி மண்ணுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்கவும், உலக நன்மைக்காகவும், அனைத்து மக்களும் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டுள்ளார்.

பச்சை பட்டினி விரதத்தின் போது கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதனால் அம்மன் உடல் உஷ்ணத்தில் கொதிப்பதை கட்டுப்படுத்தவே பூச்சொரிதல் விழாவின் போது பல்வேறு வகையிலான மலர்களை கொண்டு அம்மன் சிலை உள்ள கருவறை முழுவதும் நிரப்பி வைக்கப்படும்.

ரெங்கநாதர் கோவில்

இந்த பூச்சொரிதல் விழாவின் போது திருச்சி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவர். 

இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊழியர்கள் சார்பில் நேற்று காலை கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து பூத்தட்டுகளை தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பூத்தட்டுகளை கையில் சுமந்து தெற்குவாசல் வரை ஊர்வலமாக சென்றனர்.  பின்னர் அங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை சமயபுரம் கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்