காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
ஆரல்வாய்மொழியில் தனிக்குடித்தனத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் காதல் திருமணம் செய்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் தனிக்குடித்தனத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் காதல் திருமணம் செய்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
ஆரல்வாய்மொழி அழகியநகரை சேர்ந்தவர் அழகப்பன். இவருடைய மகன் கணேசன் (வயது 23). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். கணேசனுக்கு உடன் பிறந்த 2 தங்கைகளும், ஒரு தம்பியும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கணேசன், கடுக்கரை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் கணேசன் அழகியநகரில் உள்ள பெற்றோர் வீட்டில் மனைவியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.
தற்கொலை
தற்போது, கணேசனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கணேசனுக்கு 2 தங்கைகளும், தம்பியும் இருப்பதால் பெற்றோர், அவரை தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெற்றோருக்கும் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இதனால், கடந்த சில நாட்களாக கணேசன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று கணேசன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கணேசன் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சோகம்
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனிக்குடித்தனம் செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.