விவசாயிகள் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல்
காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விவசாயிகள் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
காங்கேயம்
காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விவசாயிகள் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல்
உடுமலையில் இருந்து பொங்கலூர் வரை பி.ஏ.பி. பாசனப் பகுதிகளை கலெக்டர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு முறையாக தண்ணீர் விட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கேயத்தில் விவசாயிகள் கடந்த மாதம் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் காங்கேயம் வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு குழு விவசாயிகள் 1000 பேர் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவது என முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கேயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் 50 பேர் காங்கேயம் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்களை பெற்றுச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காங்கேயம் கரூர் சாலையில் உள்ள பாசன விவசாயிகளின் தேர்தல் பணிமனையில் இருந்து மாட்டு வண்டியில் மாடுகள் இல்லாமல் விவசாயிகள் இழுத்து வந்து காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பது குறித்து காங்கேயம் வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு குழு விவசாயிகள் கூறியதாவது
தண்ணீர் பிரச்சினை
காங்கேயம், வெள்ளகோவில் பி.ஏ.பி. வாய்க்காலின் கடை மடை பாசன பகுதியாகும். இந்த பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளாக பாசனத்திற்கு உரிய நீர் கிடைப்பதில்லை. பி.ஏ.பி. சட்ட விதிகளின்படி, 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு 2 சுற்று தண்ணீர் விட வேண்டும்.ஆனால் அவ்வாறு செய்யாமல் 14 நாட்களுக்கு பதில் வெறும் 3 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கொடுத்து, மீதமுள்ள 28 நாட்கள் அடைக்கப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் மண் வாய்க்கால் இருந்தபோது ஆண்டுக்கு 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டும், தண்ணீர் கடைமடை வரை முழுமையாக வருவதில்லை. இது குறித்து பி.ஏ.பி. என்ஜினீயர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த பிரச்சினையை தீர்க்கவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும், காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் 1000 விவசாயிகள் வேட்பு மனுதாக்கல் செய்ய முடிவு செய்து இருந்தோம். அதன்படி இதுவரை 150 விவசாயிகள் விருப்ப மனுவை வாங்கி சென்று உள்ளனர். ஒரு விவசாயி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இவ்வாறுஅவர்கள் கூறினர்.