பரமத்திவேலூரில் வெற்றிலை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்திவேலூரில் வெற்றிலை விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி.;
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை, குப்பிச்சிபாளையம், பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், நன்செய் இடையாறு, பொய்யேரி, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விலையும் வெற்றிலைகளை விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெறும் தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு ஏலம் விடப்பட்ட வெற்றிலையை வியாபாரிகள் ஏலம் எடுத்து சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தினந்தோறும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம் பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்திற்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் வெற்றிலை சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், முதியம் பயிர் கற்பூரி வெற்றிலை சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து குறைந்ததன் காரணமாக வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வெற்றிலை விலை உயர்ந்துள்ளதால் அதனை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.