கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
ஆனைமலை, கோட்டூர் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.;
பொள்ளாச்சி,
தமிழகத்தில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறவும், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கவும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தற்போது படிப்படியாக கொரானா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை, கோட்டூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாபு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், வாக்குச்சாவடிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
ஒத்துழைப்பு
அதன்பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதற்கு காரணம், பொதுமக்களின் அலட்சியமே ஆகும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்குப்பதிவு நாளில் பொதுமக்கள் வந்து செல்லும் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.