உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே பெரியபட்டு கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் ரூ.92 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றி வந்து வெளியூர்களில் இறக்கி விட்டு மீண்டும் நாமக்கல் திரும்பி சென்று கொண்டிருந்ததும், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உளுந்தூர்பேட்டை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் ரிஷிவந்தியத்தை அடுத்த பாக்கம் கூட்டு சாலை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் துரைசாமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரிடம் ரூ.59,800, சுரேஷ் என்பவரிடம் ரூ.61,500 இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் இவர்கள் ரிஷிவந்தியம் ஒன்றியம் அத்தியூர் கிராமத்தில் ஆடுகளை விலைக்கு வாங்கவந்ததும், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதை ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணியிடம் ஒப்படைத்தனர்.