முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம்
கடலூரில், முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரூ.200 அபராதத்தை சுகாதாரத்துறையினர் வசூலித்து நடவடிக்கை எடுத்தனர்.
கடலூர்,
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று உருவானது. இதனால் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நோய்த்தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அபராதம்
அதன்படி கடலூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மேற்பார்வையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, சந்துரு, மதன், பரணி ஆகியோர் கடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் உதவியுடன் டவுன் ஹால் வழியாக முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
மேலும் அந்த வழியாக வந்த தனியார், அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்களிடம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். நீங்கள் அணிவதோடு, வரும் பயணிகளையும் கட்டாயம் முக கவசம் அணிய வற்புறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முக கவசம் அணியாமல் வந்த தனியார் பஸ் கண்டக்டர், டிரைவர்களுக்கும் ரூ.200 அபராதம் விதித்தனர். நேற்று மட்டும் 16 பேரிடம் அபராதம் வசூலித்தனர்.
மேலும் அவர்களுக்கு முக கவசமும் வழங்கினர். இந்த நடவடிக்கை தொடரும் என்றும், அவர்கள் கூறினர்.