மயிலம் அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதல்; 20 பேர் காயம்
மயிலம் அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் காயமடைந்தனர்.
மயிலம்,
திருநெல்வேலியில் இருந்து தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் 49 பேர் பயணம் செய்தனர். பஸ்சை திருநெல்வேலியை சேர்ந்த ஜெபஸ்டின்(வயது 31) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சுக்கு முன்னால் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் தரணி (44), என்பவர் ஓட்டினார்.
50 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்தது
இந்த நிலையில், மயிலம் கேணிப்பட்டு என்ற இடத்தில் வந்த போது சொகுசு பஸ் திடீரென லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்புக் கட்டைகளை உடைத்துக்கொண்டு, சுமார் 50 அடி ஆழ பள்ளத்துக்குள் பாய்ந்தது.
இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் அனைவரும் அபாய குரல் எழுப்பினர். தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ்சின் இடிப்பாட்டிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
20 பேர் காயம்
இதில் திருநெல்வேலி பகுதியை சார்ந்த நாயகர் கண்ணன் மனைவி கீதா (48), சென்னையை சேர்ந்த இசக்கிமுத்து மனைவி ராதா (48), சங்கரன்கோவில் அடுத்த தாழையூர் ஞானதாஸ் மனைவி ரோஸ்லின் (41), பாலசுப்பிரமணிய புரம் ராமச்சந்திரன் மனைவி சரண்யா (21) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே பஸ் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் தரணி லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.