வங்கி-ஏ.டி.எம். மையங்களின் சேவை முடக்கம்

வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கி, ஏ.டி.எம். மையங்களின் சேவை முற்றிலும் முடங்கியது.

Update: 2021-03-16 14:44 GMT

திண்டுக்கல்:

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 
அதன் தொடர்ச்சியாக நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் செயல்படும் 400 வங்கி கிளைகளில் பணியாற்றும் 4 ஆயிரம் பேர் வேலைக்கு வரவில்லை. 
இதனால் வங்கிகள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. ஒருசில வங்கிகள் மூடப்பட்டு கிடந்தன. 
ஏற்கனவே சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் வங்கிகள் விடுமுறை ஆகும். அதோடு 2 நாட்கள் வேலைநிறுத்தம் என்பதால் மொத்தம் 4 நாட்களாக வங்கிகள் மூடிக்கிடக்கிறது.

வாடிக்கையாளர்கள் தவிப்பு 

எனவே, வங்கிகளில் காசோலைகள், வரைவோலைகள் செலுத்துதல் மற்றும் பண பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியவில்லை. 
அந்த வகையில் சுமார் ரூ.800 கோடி வரை பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறினர். 
இதற்கிடையே 4 நாட்களாக தொடர்ந்து வங்கிகள் செயல்படாததால் ஏ.டி.எம். மையங்களிலும் முறையாக பணம் நிரப்பவில்லை. வங்கிகள், ஏ.டி.எம். மையங்களின் சேவை முற்றிலும் முடங்கியதால் வணிகர்கள், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.
இதற்கிடையே திண்டுக்கல் சாலை ரோட்டில் வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் காமாட்சிராஜா, அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அனந்தராமன் மற்றும் ஜினோவில்பிரட், கனரா வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் தர்மர், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்