ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு: ‘திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கே எங்கள் வாக்கு’ - பொதுமக்கள் உறுதி
ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்கும் கட்சிக்குத்தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவோம் என்று பொதுமக்கள் எச்சரித்தனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சாலை தச்சூர் கூட்டுச்சாலை, கண்ணிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பருத்திமேனிகுப்பம், தொளவெடு, சென்னங்காரணி, பாலவாக்கம், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. இந்த சாலை அமைத்தால் விளைநிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிப்படையும்.
இதற்காக ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு ஆறு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பல போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பருத்திமேனிகுப்பத்தில் விளைநிலங்களில் நின்று 6 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும். 6 வழி சாலை திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதி அளிக்கும் கட்சிக்குத்தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவோம் என்று எச்சரித்தனர்.