இறந்து கிடந்த குட்டியானை

இறந்து கிடந்த குட்டியானை

Update: 2021-03-16 02:54 GMT
கூடலூர்

முதுமலையில் குட்டியானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து கிடந்த குட்டியானை

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது தண்ணீர் வற்றிய நிலையில் உள்ள ஒரு குட்டை அருகில் குட்டியானை இறந்து கிடந்தது. 

இதை கண்ட வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடப்பது 2 வயது மதிக்கத்தக்க பெண் குட்டியானை என்பது தெரியவந்தது. 

புலி அடித்து கொன்றதா?

மேலும் அந்த இடத்தில் புலியின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இது தவிர குட்டியானையின் உடலில் முன் மற்றும் பின்பக்க பாகங்களை புலி கடித்து தின்று உள்ளது.  இதையடுத்து கால்நடை டாக்டர் கோசலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, குட்டியானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

பின்னர் வனத்துறையினர் கூறியபோது, கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த குட்டியானையை புலி அடித்து கொன்றிருக்கலாம் அல்லது இறந்து கிடந்த குட்டியானையின் உடலை புலி தின்று இருக்கலாம். முக்கிய உடற்பாகங்கள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை கிடைத்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என்றனர். 

தொடர்ந்து குட்டியானையின் உடல் அங்கேயே பிற வனவிலங்குகள் தின்பதற்காக விடப்பட்டது. மேலும் குட்டியானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்