பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று கோவையில் எல்.முருகன் பேட்டி
பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று கோவையில் எல்.முருகன் கூறினார்.
கோவை
பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று கோவையில் எல்.முருகன் கூறினார்.
வெற்றி உறுதி
பாரதீய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது பிரசாரத்தை தொடங்குவதற்காக நேற்று காலை தாராபுரத்துக்கு வந்தார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த எல்.முருகன் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
விரைவில் மீதம் உள்ள 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே தங்கள்தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி மக்களை சந்தித்து வருகின்றனர்
வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரசாரம்
பா.ஜனதாவில் அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு என்பது அரசியல் பின்புலம் மற்றும் அவர்களின் அரசியல் சேவை உள்ளிட்டவற்றை கண்டறிந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜ.கவில் கட்சி தொண்டர்கள் அனைவரும் கட்டுக்கோப்பானவர்கள். கொள்கைக்காக உறுதி கொண்டவர்கள். அவர்கள் கட்சி எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுபட்டவர்கள். விரைவில் கட்சியின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.