கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு

கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு

Update: 2021-03-16 02:07 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் என்கிற புருஷோத்தமன் (வயது 19). ஐ.டி.ஐ. முடித்து பொள்ளாச்சியில் உள்ள ஒரு பணிமனையில் வேலை பார்த்து வந்தார். இவர் சமீபத்தில் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தார். 

கடந்த 7-ந் தேதி முதல் பிரசாந்தை காணவில்லை. இதுகுறித்து  வடக்கு போலீசில் அவரது தந்தை அம்சாவேல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, மாயமான வாலிபரை இன்ஸ்பெக்டர் விஜயன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படை குழுவினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்தநிலையில், சேத்துமடை அண்ணா நகரைச் சேர்ந்த அவரது நண்பர் உதயகுமார் என்பவர் பிரசாந்திடம் பணம் கடன் கேட்டு உள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று பிரசாந்த் மறுத்து உள்ளார். 

புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க பணம் உள்ளது, ஆனால் எனக்கு கடன் கொடுக்க பணம் இல்லையா என்று கூறி ஆத்திரத்தில் பிரசாந்தை காண்டூர் கால்வாயில்  தள்ளி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, உதயகுமார் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக பிரசாந்த் உடலை தேடும் பணியில் போலீசார், தீயணைப்புத்துறையினர்  மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை காண்டூர் கால்வாய் குகைக்குள் உள்ள ஒரு மரக்கிளையில் பிரசாந்த் உடல் மிகவும்அழுகிய நிலையில் சிக்கி இருந்தது. உடலை மீட்டு, போலீசார் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்