பொள்ளாச்சி
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பொள்ளாச்சியில் ரூ.10 கோடி பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
வேலைநிறுத்தம்
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து அகில இந்திய அளவில் நேற்று முதல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகள் நேற்று மூடப்பட்டன.
இதன் காரணமாக பணத்தை செலுத்தவும், எடுக்கவும் முடியாமல் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
கிராமப்புறங்களில் இருந்து வங்கி சேவைக்காக பொள்ளாச்சிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சில ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் கடும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள ஒரு வங்கி முன் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கிளை தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது
ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு
தேசிய வங்கிகள் நலிவடைவதற்கு தனியார்களின் வராக்கடன் தான் காரணம். அவற்வை வசூலிக்காமல் பொதுத்துறை வங்கிகளை, அதே தனியாரிடம் ஒப்படைப்பது தவறாகும்.
இதன் மூலம் வங்கி துறையில் உள்ள பொதுமக்கள் சேமிப்பு சுமார் ரூ.147 லட்சம் கோடி தனியார் வசம் சென்று விடும் அபாயம் உள்ளது. இது நாட்டின் பொருளதாரம், பொதுமக்களுக்கு எதிரானது.
இதன் மூலம் பொதுத்துறை வங்கிகள் நாட்டிற்கு ஈட்டிதரும் வருமானம் நின்று விடும். வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இதன் காரணமாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை தாலுகா பகுதிகளில் சுமார் 60 வங்கிகள் மூடப்பட்டு உள்ளன. இதன் மூலம் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.