வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் ரூ500 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் ரூ.500 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் வங்கிகள் வெறிச்சோடியதால் வாடிக்ைக யாளர்கள் அவதியடைந்தனர்.
கோவை
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் ரூ.500 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் வங்கிகள் வெறிச்சோடியதால் வாடிக்ைக யாளர்கள் அவதியடைந்தனர்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, நாடு முழுவதும் வங்கிகளில் உள்ள 2 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வராக்கடன்களை திருப்பி வசூலிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
இதன்காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் வாடிக்கை யாளர்கள் அவதியடைந்தனர்.
ஆர்ப்பாட்டம்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரெயில்நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மண்டல செயலாளர் ராஜவேலு தலைமை தாங்கினார்.
இதில் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்பிரமணியன், சசிதரன், மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மண்டல கனரா வங்கி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச்செயலாளர் மணிமாறன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மேக்சன், பரணிதரன், திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வேலைறுத்த போராட்டம் குறித்த நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கூறியதாவது:-
ரூ.146 லட்சம் கோடி
நம் நாட்டில் விவசாய துறைக்கும், தொழில்துறைக்கும் மாணவர்களுக்கும் அதிகளவு கடனுதவி வழங்குவது பொதுத்துறை வங்கிகள்தான். வேளாண்துறை சார்ந்த கடன் மட்டும் ரூ.12 லட்சம் கோடி பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்பட்டு உள்ளது.
கிராமப்புறங்களுக்கும் வங்கி சேவைகளை லாப நோக்கமின்றி வழங்கி வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்களின் சேமிப்பு பணம் ரூ.146 லட்சம் கோடி உள்ளது.
பொதுத்துறை வங்கிகள் பாதுகாப்பானது என்பதால்தான் பொதுமக்கள் தங்கள் பணத்தை இங்கு சேமித்து வருகின்றனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கினால் பொதுமக்களின் சேமிப்பு பணத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும்.
பணப்பரிவர்த்தனை பாதிப்பு
கோவை மாவட்டத்தில் 600 வங்கிக்கிளைகளில் பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இதன்காரணமாக ரூ.400 கோடி காசோலை மற்றும் ரூ.100 கோடி ரொக்கம் என ரூ.500 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.