சிறுத்தையிடம் இருந்து குட்டியை காப்பாற்ற போராடிய ஆட்டுக்கு சிகிச்சை
சிறுத்தையிடம் இருந்து குட்டியை காப்பாற்ற போராடிய ஆட்டுக்கு சிகிச்சை
வால்பாறை
வால்பாறையில் சிறுத்தையிடம் இருந்து குட்டியை காப்பாற்ற போராடிய ஆட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுத்தைகள் நடமாட்டம்
வால்பாறை நகர் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம், எம்.ஜி.ஆர். நகர், கக்கன் காலனி, திருவள்ளுவர் நகர், கூட்டுறவு காலனி, காமராஜ் நகர் உள்ளிட்ட குடியிப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்தநிலையில் வால்பாறை நகரை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வரக்கூடியவர்கள் இரவு நேரத்தில் தங்களின் கால்நடைகளை உரிய பாதுகாப்புடன் பட்டிகளில் அடைத்து வைத்து வளர்க்காமல் வீடுகளுக்கு முன்புறம் சாலைகளில் சுற்றித்திரிய விட்டு விடுகின்றனர்.
இதனால் வால்பாறை நகரை சுற்றியுள்ள எஸ்டேட் வனப்பகுதிகளில் உள்ள சிறுத்தைபுலிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நுழைந்து கால்நடைகளை கொன்று தின்று வந்தன.
தாக்குதல்
இந்த நிலையில் வால்பாறை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் 2 வயது ஆட்டுக்குட்டியை அதிகாலை 4.30 மணிக்கு சிறுத்தை வேட்டையாட முயன்றது.
இதைப் பார்த்த தாய் ஆடு சிறுத்தையிடமிருந்து குட்டியை காப்பாற்ற போராடி உள்ளது. இதில் தாய் ஆட்டுக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதற்கிடையே குட்டிஆடு இறந்து விட்டது. படுகாயம் அடைந்த தாய் ஆட்டுக்கு வால்பாறை அரசு கால்நடை டாக்டர் மெய்யரசன் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். இறந்து போன குட்டி ஆட்டை வால்பாறை வனச்சரக வனத்துறையினர் கால்நடை டாக்டர் மூலமாக பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் அறிவுரையின்படி வனவர் முனியாண்டி தலைமையில் வனத்துறையினர் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.