சேலம் - உளுந்தூர் பேட்டை வரையிலான சுங்கச்சாவடிகளில் பணியாளர்கள் போராட்டம் கட்டணமின்றி சென்ற வாகனங்களால் பரபரப்பு

சேலம் - உளுந்தூர் பேட்டை வரையிலான சுங்கச்சாவடிகளில் பணியாளர்கள் போராட்டம் கட்டணமின்றி சென்ற வாகனங்களால் பரபரப்பு.

Update: 2021-03-16 01:24 GMT
வாழப்பாடி,

சேலம் - உளுந்தூர் பேட்டை வரையிலான சுங்கச் சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக சம்பள உயர்வு குறித்து நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். நேற்று மாலைவரை பேச்சு வார்த்தை உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் திடீரென கேட்டை திறந்து வைத்தனர். கணினிகள் அனைத்தையும் அணைத்து வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, நத்தக்கரை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் ஆகிய 3 சுங்கச்சாவடி ஊழியர்களும் இந்த போராட்டத்தில் நேற்று கலந்து கொண்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக, நூற்றுக்கும் மேலான வாகனங்கள், சுங்கக் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடந்து சென்றன. மேட்டுப்பட்டி சுங்கச் சாவடியில் இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையிலான போலீசார், சுங்கச்சாவடிக்கு சென்று, பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊதிய உயர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.  இதனால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்