சேத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

சேத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Update: 2021-03-16 00:30 GMT
ராஜபாளையம் சட்டமன்றத்தொகுதியில் அதிமுக சார்பாக பால்வளத்துறை அமைச்சர் கே.டிராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். ராஜபாளையம் ஒன்றியத்தில் எம்.பி.கே. புதுப்பட்டியில் நேற்று 2வது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர், நக்கனேரி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், சுந்தரர் நாச்சியார்புரம், சேத்தூர், வடக்கு தேவதானம், சுந்தரராஜபுரம், கணபதிசுந்தரபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் கே.டி..ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் பேசும்போது, ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் 
என்றும் அதற்கு நீங்கள்தான் ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பல்வேறு சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இந்த தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நான் போட்டியிடுகின்றேன் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று 63 பேர்கள் விருப்பமனு கட்டினார்கள். நாம் முயற்சிதான் எடுக்க முடியும் முடிவெடுப்பது ஆண்டவன்தான். இங்குள்ள மக்கள் விரும்பிய காரணத்தினால் ஆண்டவன் இட்ட கட்டளையை ஏற்று நான் இங்கு போட்டியிடுகின்றேன். 10 ஆண்டுகளில் நான் அமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் பேசிய முதல் பேச்சு ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளுக்கு முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும். அருப்புக்கோட்டை காரியாபட்டி திருச்சுழி பகுதிகளுக்கு வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஜெயலலிதாவிடம் நான் கோரிக்கை வைத்து விருதுநகர் மாவட்டத்தில் மூன்று கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். அதன் ஒரு பகுதிதான் இந்த செட்டியார்பட்டி பேரூராட்சி சேத்தூர் பேரூராட்சி ராஜபாளையம் கிராம பகுதிகளுக்கு இன்றைக்கு முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. சேத்தூரில்தான் முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பூஜை போட்டு ஆரம்பித்தேன். இன்றைய அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணித் தண்ணீர் வருகின்றது என்று சொன்னால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நான்தான். ராஜபாளையம் பகுதியில் சுற்றுச் சாலை திட்டத்தை செயல்படுத்த நிலங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. ராஜபாளையம் பகுதியில் மட்டும் 13 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை கொண்டு வந்துள்ளேன். மேலும் ஐந்து இடங்களில் திறப்பதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் முடிந்தவுடன் அந்த இடங்களில் அம்மா மினிகிளினிக் திறக்கப்படும். இன்னும் ஏராளமான பணிகள் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே வாக்காளர் பெருமக்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றிபெறச் செய்யுங்கள். 

தெய்வம் விரும்பாத செயலை நான் எக்காரணம் கொண்டும் செய்யமாட்டேன். மனச்சாட்சிக்கு விரோதமாக நிச்சயமாக எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டேன். எனது பேட்டிகள் பேச்சுக்கள் வேகமாக இருக்கும் ஆனால் அதில் உண்மை இருக்கும். தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடுகள் அமெரிக்காவிற்கு நான் சென்றுள்ளேன். அங்கு என்னை பார்ப்பவர்கள் நீங்கள் தைரியசாலி தைரியமாக பேசக்கூடியவர்கள் என்று கூறுவார்கள். சேத்தூர் பகுதி மக்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்ட மக்கள், உழைக்கின்ற மக்கள், பாட்டாளி, படைப்பாளி, நெசவாளிகள் வாழ்கின்ற புண்ணிய பூமியாகும். சேத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுப்பேன். நான் சொன்ன சொல்லை உறுதியாக காப்பாற்றுவேன். 5 முறை இரட்டை இலை சின்னத்தில் நின்று 5முறையும் வெற்றி பெற்றிருக்கின்றேன். ராஜபாளையம் பகுதியில் வியாபாரிகளின் கோரிக்கைகள் குறைகள் இருந்தால் அந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய தொண்டனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக செயல்படுவேன். எல்லா சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்வேன். எல்லா சமுதாய மக்களுக்கும் உற்ற நண்பனாக இருப்பேன். அண்ணன் தம்பியாக அனைத்து சமுதாய வளர்ச்சிக்கும் நான் காரணமாக இருப்பேன். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கே.டி.ராஜேந்திர பாலாஜியான என்னை நீங்கள் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும். இந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பேசினார். தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிராமம் கிராமாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்ததார்.

மேலும் செய்திகள்