அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா
திருச்சியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.
திருச்சி, மார்ச்.16-
திருச்சியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.
மாணவ-மாணவிகளுக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். திருச்சி புனித ஜேம்ஸ் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரியர் சென்று வந்த வகுப்பறையில் இருந்த 40 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தங்கி இருந்த மேலும் சில மாணவ-மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள கல்லூரியில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேற்று காலை கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். தொடர்ந்து பொதுசுகாதாரத்துறையின் மூலம் திருச்சி சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ்நகரில் காய்ச்சல் சிறப்பு மருத்துவமுகாம் நடந்ததையும் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.