தனியார்மயம் ஆக்குவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது

வங்கிகள் தனியார்மயம் ஆக்குவதை கண்டித்து திருச்சியில் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர். இதனால் காசோலை பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டன.

Update: 2021-03-15 21:56 GMT
தனியார்மயம் ஆக்குவதை கண்டித்து
வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
காசோலை பரிவர்த்தனை பணிகள் பாதிப்பு
திருச்சி, மார்ச். 16-
வங்கிகள் தனியார்மயம் ஆக்குவதை கண்டித்து திருச்சியில் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர். இதனால் காசோலை பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டன.

வங்கி ஊழியர்கள் போராட்டம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும், பட்ஜெட்டில் அறிவித்தபடி ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார் மயமாக்க கூடாது, வங்கிகள் தனியார் மயமானால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சியில் தொடங்கியது

இந்த அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை சேர்ந்த 9 அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாக திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் நேற்று மூடப்பட்டன.

ஆர்ப்பாட்டம்

வங்கிகளை மூடிய பின்னர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திருச்சி ஸ்டேட் வங்கி பிரதான கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் ஜி. ராமராஜ் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் பாலாஜி கோரிக்கைகளை விளக்கி பேசினார் மற்றும் சங்க நிர்வாகிகள் கணபதி சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், சுரேஷ் உள்பட பலர் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

காசோலை பணிகள் பாதிப்பு

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகம் முன் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு திருச்சி மண்டல தலைவர் சுபாஷ் தலைமை தாங்கினார். 

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ராஜகோபால், நிர்வாகிகள் கிருஷ்ணன், தியாகராஜன் ஆகியோர் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாள் வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்ட அளவில் சுமார் 200 வங்கிகள் மூடப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் சுமார் ரூ.20 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்