புளியரை சோதனை சாவடியில் ரூ.33 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது
புளியரை சோதனை சாவடியில் ரூ.33 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது.;
தென்காசி, மார்ச்:
புளியரை சோதனை சாவடியில் ரூ.33 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது.
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பறக்கும் படைகள் மற்றும் போலீசார் குழுக்களாக அமைக்கப்பட்டு இந்த சோதனை நடைபெறுகிறது.
தமிழக -கேரள எல்லையான புளியரை பகுதியில் தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுகின்றன.
ரூ.33 லட்சம் வெளிநாட்டு பணம்
இந்த நிலையில் நேற்று இரவு கேரளாவில் இருந்து வந்த ஒரு அரசு பஸ்சை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளான செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன், புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞான ரூபி பரிமளா மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 50) என்பவர் வெளிநாட்டு பணம் வைத்திருந்தார். அதில் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளின் பணம் ரூ.33 லட்சத்து 750 இருந்தது.
அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றிக் கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும், அதற்கான சான்றுகள் வைத்திருப்பதாகவும் கூறினார். இருப்பினும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.