வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்: ஈரோடு மாவட்டத்தில் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிப்பு
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஈரோடு
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
வேலைநிறுத்த போராட்டம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்தும் மார்ச் 15-ந் தேதி மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தன. அதன்படி வங்கி ஊழியர்கள் நேற்று தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 214 கிளைகளில் பணியாற்றும் 1,800-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் பணியாளர்கள் இன்றி அனைத்து வங்கிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து வங்கிகளும் மூடப்பட்டு கிடந்ததால் பணம் எடுப்பதற்காக வந்த வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
ரூ.600 கோடி வர்த்தம் பாதிப்பு
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ரூ.600 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 360 ஏ.டி.எம். மையங்களில் பெரும்பாலான மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். வங்கிகள் முன்பு வேலைநிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே சமயம் தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஐ.டி.பி.ஐ யை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்தும் ஈரோடு ஸ்டேட் வங்கி ஈரோடு கிளை வளாகத்தில் நேற்று வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட வங்கி ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.