மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு: பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு
மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதை தொடா்ந்து பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.;
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டது. தினந்தோறும் 20-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத தனியார் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று அனைத்து பஸ்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு சென்ற பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.