97 சதவீத வங்கி ஊழியர்கள் பங்கேற்பு
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கிய நிலையில் மாவட்டத்தில் 97 சதவீத வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
விருதுநகர்,
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கிய நிலையில் மாவட்டத்தில் 97 சதவீத வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
வேலைநிறுத்தம்
மத்திய அரசு நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.
இதுகுறித்து மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வங்கி ஊழியர்கள் நேற்று அறிவித்தபடி வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
பெரும் பாதிப்பு
தமிழகம் முழுவதும் வங்கி கிளைகள் செயலிழந்த நிலையில் பணப்பரிவர்த்தனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 137 பொதுத்துறை வங்கிகளில் 134 வங்கிகள் செயல்பட வில்லை. இந்த வங்கிக்கிளைகளில் பணியாற்றும் 1,100 ஊழியர்களில் 1,070 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அதாவது 97 சதவீத வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்று உள்ளதாக வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
பண பரிவர்த்தனை
ஒரு சில வங்கிகளில் மட்டும் அதிகாரிகள் மட்டும் வேலைக்கு வந்த நிலையில் பண பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை.
மாவட்டத்தில் 93 சதவீத வங்கி கிளைகள் செயல்படாத நிலையில் 97 சதவீத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பண பரிவர்த்தனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் முடங்கின. விருதுநகரில் வாரத்தின் முதல் நாள் வேலைநிறுத்தம் தொடங்கியதால் வணிக வட்டாரத்தினர் பெரிதும் பாதிப்படைந்தனர்.
3-வது நாள்
ஏற்கனவே கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை ஆன நிலையில் நேற்று 3-வது நாளாக வங்கிகள் செயல்படாததால் ஏ.டி.எம். மையங்களில் பணம் காலியானது.
இதனால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏ.டி.எம். மையம் போனால் பணம் எடுக்க முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அதிலும் வழக்கமாக ஓய்வூதியம் பெறும் முதியோர் மாத தொடக்கத்திலும், மாதம் 15-ந் தேதியும் தங்கள் ஓய்வூதியப்பணத்தில் செலவுக்காக ஏ.டி.எம்.மையங்கள் மூலம் பணம் எடுப்பது உண்டு.
நேற்று ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இன்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்வதால் பணப் பரிவர்த்தனையில் தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.