தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் குறித்து சிவிஜில் செயலியில் புகார் தெரிவிக்கலாம்- கலெக்டர் விஷ்ணு தகவல்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் குறித்து சிவிஜில் செயலியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை, மார்ச்:
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் பற்றி ‘சிவிஜில்' செயலியில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
புதிய செயலி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நெல்லை மாவட்டத்திற்கு நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக சுபோத், அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் தொகுதி களுக்கு ராஜேஷ் திரிபாதி ஆகியோர் செலவின பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சிவிஜில் ஆப் என்ற செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது
புகார் தெரிவிக்கலாம்
இந்த செயலியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது உடனுக்குடன் புகைப்படத்துடன் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் பறக்கும் படை குழுக்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு ½ மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படியான செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.