பிளாஸ்டிக் கழிவுகள் பறிமுதல்
கொடைக்கானல் பகுதியில் வாகனத்தில் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டது
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் உள்பட 17 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் ஒரு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை குப்பை கிடங்குக்கு கொண்டு செல்வதாக நகராட்சி ஆணையாளர் நாராயணனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் சுப்பையா, பாண்டிசெல்வம் ஆகியோர் ஆனந்தகிரி 4-வது தெருவில் உள்ள ஒரு கடையின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் நேற்று சோதனை நடத்தினர்.
அதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் கொடைக்கானல் புறநகர் மற்றும் கிராம பகுதிகளின் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை தடுக்க வட்டார சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.