நெல்லையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் நேற்று வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை, மார்ச்.16-
நெல்லையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
மத்திய அரசின் கொள்கை முடிவான பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நெல்லையில் உள்ள வங்கிகளில் பணியாளர்கள் வேலைக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து நெல்லை ஸ்ரீபுரம் ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி கணபதி ராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இன்றும் நடக்கிறது
இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகி சார்லஸ், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி சிவசங்கர், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சண்முகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நில அளவை மற்றும் கனிம வளத்துறைக்கு பணம் கட்டுவதற்கு முடியாமல் ஏராளமான பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இன்றும் (செவ்வாய்க்கிழமை) வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.