போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 1½ ஆண்டில் போலீஸ்காரர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தென்தாமரைகுளம்:
திருமணமான 1½ ஆண்டில் போலீஸ்காரர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
போலீஸ்காரர் மனைவி
நாகர்கோவில் அருகில் உள்ள எறும்புக்காட்டை சேர்ந்தவர் கோசலைமணி, தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வர வடிவு. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோசலைமணி சில ஆண்டுகளுக்கு முன்பு சாமிதோப்பு வந்து, மேலத்தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இவருடைய மூத்த மகன் நாகராஜன் (வயது 28). இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-செல்வபாய் தம்பதி மகள் ஷிவானிக்கும் (22) கடந்த 1½ ஆண்டுக்கு திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நாகராஜன் தன்னுடைய தந்தை வீட்டின் அருகில் மனைவியுடன் வசித்து வந்தார்.
தற்கொலை
கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட உட்கார்ந்ததாகவும், அப்போது ஷிவானியின் சமையல் பிடிக்கவில்லை என்று மனைவியுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாகராஜன் பணிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
அதன்பிறகு ஷிவானி தன் அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டதாகவும், வெகு நேரம் வெளியே வரவில்லை என்றும் தெரிகிறது. அதைத்தொடர்ந்து நாகராஜன் குடும்பத்தினர் ஷிவானி குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஷிவானி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். உடனே அவரை கீழே இறக்கி நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஷிவானி இறந்து விட்டதாக கூறினார்கள்.
புகார்
இதுபற்றி தென்தாமரைகுளம் போலீசில் ஷிவானியின் தாயார் செல்வபாய் புகார் கொடுத்தார். அதில், ‘என் மகளுக்கும் நாகராஜனுக்கும் 24-10-2019 அன்று திருமணம் நடந்தது. அப்போது 95 பவுன் நகை போட்டு, ரூ.5 லட்சம் ரொக்கம் கொடுத்தோம். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன் ஷிவானி கர்ப்பம் அடைந்தார். திடீரென்று கரு கலைந்து விட்டது. அதற்கு என் மகள் தான் காரணம் என்று நாகராஜன் குடும்பத்தினர் குற்றம் சாட்டி பேசி, கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தான் எங்கள் மகள் இறந்துள்ளார்’ என குறிப்பிட்டு உள்ளார்.
அதன்பேரில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, ஷிவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கென்னடி வழக்குப்பதிவு செய்தார்.
ஷிவானி திருமணமாகி 1½ ஆண்டில் இறந்ததால், இந்த வழக்கை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் விசாரணை நடத்தி வருகிறார்.
ஷிவானி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாமிதோப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.