குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Update: 2021-03-15 19:47 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 
தனியார் மயம் 
பொதுத்துறையின் கீழ் செயல்படும் வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 15, 16-ந் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி அதிகாரிகள் தவிர அனைத்து பணியாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
குமரி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது சுமார் 240 வங்கிகளை சேர்ந்த 1800-க்கும் அதிகமான ஊழியர்கள் நேற்று தங்களது பணிகளை புறக்கணித்தனர். இதனால் பெரும்பாலான வங்கிகள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒருசில வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது
பல இடங்களில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தெரியாமல் வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைக்காக வங்கிகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். அதோடு ஏற்கனவே சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏ.டி.எம். மையங்களில் பணம் குறைவாக இருந்துள்ளது. நேற்று வங்கி பணிகள் நடைபெறாததால் பல ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. இதனால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.
பண பரிவர்த்தனை பாதிப்பு 
வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கி வளாகத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜாக்சன் கென்னடி, வி‌‌ஷ்ணு, சாகுல் அமீது, ஆன்டோ ஜவஹர் உள்பட பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். 
போராட்டம் குறித்து நிர்வாகிகள் கூறும்போது, ‘எங்களது கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இதனால் பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக சுமார் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது’ என்றனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆதரவு
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக நடக்கிறது.

மேலும் செய்திகள்