தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-15 19:12 GMT
புதுக்கோட்டை, மார்ச்.16-
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயன்ற பெண்
கறம்பக்குடியை சேர்ந்த பரமசிவத்தின் மனைவி அன்பரசி (வயது 35). இவர் நேற்று காலை புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் உமாமகேஸ்வரி தொடங்கி வைத்து அதில் பங்கேற்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் நின்ற அன்பரசி திடீரென தான் மறைத்து கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், தனிப்பிரிவு போலீஸ் நாகராஜ் ஆகியோர் விரைந்து சென்று அன்பரசியிடம் இருந்து கேனை பறித்தனர். அப்போது அவர் அழுதுகொண்டே புலம்பினார். அந்த பெண்ணை தனியாக அழைத்து செல்லும்படியும், அவரிடம் என்ன கோரிக்கை என்பது தொடர்பாக விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
வரதட்சணை கொடுமை
அன்பரசியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவரது கணவர் மற்றும் கணவரின் அண்ணன் ஆகியோர் சேர்ந்து தன்னிடம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும், தான் வேலை செய்யும் அரிசி ஆலைக்கு வேலைக்கு செல்ல விடாமல் தடுப்பதாகவும், கணவர் டெய்லராக இருப்பதாகவும், கணவரின் அண்ணன் அரசு பஸ் டிரைவராக பணியாற்றுகிறார் என்றும், இது தொடர்பாக ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தார். அவர் போலீசாரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பின் அன்பரசி அங்கிருந்து சென்றார். கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்