நாமக்கல்லில் பரபரப்பு: சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

நாமக்கல்லில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-03-15 19:07 GMT
நாமக்கல்,

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மளிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் தளத்தில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

இந்த சூப்பர் மார்க்கெட்டை அதன் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் வழக்கம்போல் மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நள்ளிரவு 11.30 மணியளவில் சூப்பர் மார்க்கெட்டின் பின்புற பகுதியில் திடீரென தீப்பற்றி கொண்டது. பின்னர் அந்த தீ மளமளவென சூப்பர் மார்க்கெட் வளாகம் முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சி அளித்தது.

8 மணி நேரம் போராட்டம்

இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உதவி மாவட்ட அலுவலர் தவமணி, நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் திருச்செங்கோடு, ராசிபுரம், வெப்படை மற்றும் புகழூரில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

பொருட்கள் எரிந்து சேதம்

இதனால் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இதற்கிடையே தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுஜாதா, ரவிக்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கும் என கூறப்படுகிறது. சேத மதிப்பு குறித்து தீயணைப்புத்துறையினரும், பிற அதிகாரிகளும் துல்லியமாக கணக்கிட்டு வருகின்றனர். இதையொட்டி அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்