கிரானைட் கல் விழுந்து ராஜஸ்தான் வாலிபர் பலி
நன்னிலம் அருகே ஓடும் லாரியில் கட்டி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கல் விழுந்து ராஜஸ்தான் வாலிபர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.
நன்னிலம்;
நன்னிலம் அருகே ஓடும் லாரியில் கட்டி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கல் விழுந்து ராஜஸ்தான் வாலிபர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.
கிரானைட் கல் பதிக்கும் வேலை
ராஜஸ்தான் மாநிலம் நாக்பூர் மாவட்டம் தட்டிபுரா பகுதியை சேர்ந்தவர் பூமாராம். இவருடைய மகன் முகேஷ்(வயது21), அதே பகுதியை சேர்ந்தவர் அனுமன்ராம்(30). இவர்கள் இருவரும் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள அகிலாம் பேட்டை பகுதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலில் கிரானைட் கல் பதிக்கும் வேலை பார்த்து வந்தார்.
பரிதாப சாவு
நேற்று திருவாரூரில் இருந்து முகேஷ் மற்றும் அனுமான்ராம் ஆகிய இருவரும் லாரியில் கிரானைட் கற்களை ஏற்றி கயிற்றால் கட்டி கற்களுக்கு இடையே அமர்ந்து வந்து கொண்டு இருந்தனர். இஞ்சிகுடி அருகே லாரி சென்ற போது திடீரென கிரானைட் கற்களில் கட்டியிருந்த கயிறு அறுந்தது. இதனால் முகேஷ் மற்றும் அனுமன்ராம் மீது கிரானைட் கல் விழுந்து அமுக்கியது. இதில் கிரானைட் கற்களுக்கு இடையே சிக்கிய முகேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். அனுமன்ராம் லேசான காயத்துடன் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.