ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு போட்டால் சந்திக்க தயார்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு போட்டால் சந்திக்க தயார் என்று திருவாரூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.
தஞ்சாவூர்;
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு போட்டால் சந்திக்க தயார் என்று திருவாரூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.
தேர்தல் பிரசாரம் தொடக்கம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நேற்று மாலை திருவாரூரில் இருந்து தொடங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் பூண்டி கலைவாணன்(திருவாரூர்), டிஆர்பி ராஜா(மன்னார்குடி), ஜோதி ராமன்(நன்னிலம்), வேதரத்தினம்(வேதாரண்யம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து(திருத்துறைப்பூண்டி) ஆகியோரை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-
நான் தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் இருந்து தொடங்கி இருக்கிறேன். கலைஞர் வளர்ந்த, கலைஞரை உருவாக்கிய இந்த திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறேன். கலைஞரின் மகனாக வந்து இருக்கிறேன். நான் மட்டுமா, நீங்களும் கலைஞரின் மகன்கள் தான்.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
ஏறத்தாழ 10 ஆண்டு காலம் நாட்டை குட்டிச்சுவராக்கி கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உங்களை தேடி, நாடி வந்து இருக்கிறேன். 10 ஆண்டு காலம் தமிழகத்தை பாழடித்துவிட்டார்கள். 10 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார். ஊழல் வழக்கு காரணமாக அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் பதவியை ராஜினாமா செய்தார். இடையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தார்.
அவர், ஜெயலலிதா வழக்கை பற்றியே சிந்தித்து கொண்டு இருந்த காரணத்தினால் ஆட்சியை சரியாக நடத்த முடியவில்லை. அதற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு வருட காலத்தில் உடல் நலிவுற்று மறைந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், அதற்கு பிறகு 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பு ஏற்று தமிழகத்தை சீரழித்து கொண்டு இருக்கிறார் என்பதை நாடே அறியும்.
நேற்றைக்கு(நேற்று முன்தினம்) தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணத்திற்கு கலைஞரும், மு.க.ஸ்டாலினும் தான் காரணம் என சொல்லி இருக்கிறார். 10 ஆண்டு காலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா உடல் நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவரது உடல்நலத்தை பற்றி கூட வெளியே சொல்லமுடியாத ஒரு ஆட்சியை நடத்தி கொண்டு இருந்தவர்கள் இவர்கள்.
வழக்கு போட்டால் சந்திக்க தயார்
நான் தொடர்ந்து பலமுறை சுட்டி காட்டி இருக்கிறேன். ஏன் தேர்தல் அறிக்கையில் கூட சொல்லி இருக்கிறேன். ஜெயலலிதா மர்ம மரணத்தை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கையை நாம் ஆட்சிக்கு வந்தபிறகு எடுப்போம் என்று உறுதிமொழி தந்து இருக்கிறோம். அந்த பயம் காரணமாக இந்த கூற்றை கூறியிருக்கிறார். இது உண்மை என்றால் 4 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?. ஸ்டாலின் தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் அல்லவா?.
இப்போது சொல்கிறேன். தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணம் என வழக்கு போடுங்கள். சந்திக்க நான் தயார். நீங்கள் தயாரா? நான் ரெடி. பழனிசாமியே நீங்கள் ரெடியா?. எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாமா?.
ஜெயலலிதா மரணமே மர்மமாக இன்றைக்கும் இருந்து கொண்டு இருக்கிறது. 4 ஆண்டுகளாக விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை உண்மை வெளியே வரவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக இந்த கமிஷன் விசாரணை நடத்திக்கொண்டு தான் இருக்கிறது. 8 முறை விசாரணைக்கு அழைப்பு விடுத்தும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.
மக்கள் நம்பமாட்டார்கள்
ஜெயலலிதாவுக்கும் நமக்கும் கொள்கை, லட்சியத்தில் வேறுபாடு இருக்கலாம். இறந்தது யார். ஒரு முதல்-அமைச்சர். இதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதனால் தான் தொடர்ந்து சொன்னேன். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேளையாக ஜெயலலிதா மரணத்தில் உண்மையை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு குற்றவாளிகளை அடையாளம் காட்டுவோம் என்று. நிச்சயமாக, சத்தியமாக சொல்கிறேன். இதை இந்த ஸ்டாலின் விடவே மாட்டான். இதை மூடி மறைக்க திட்டமிட்டு கலைஞர் தான் காரணம், ஸ்டாலின் தான் காரணம் என கூறுவதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.
முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய பழனிசாமியில் இருந்து கடைக்கோடி அமைச்சர்கள் வரை என்னென்ன ஊழல் செய்து இருக்கிறார்கள். எங்கே கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என முழு ஆதாரத்துடன் தமிழக கவர்னரிடம் கொடுத்து இருக்கிறோம். சில பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறது.
வெற்றி விழா கூட்டம்
இதேபோல் நாம் ஆட்சி்க்கு வந்தவுடன் திருவாரூரில் நிச்சயமாக வெற்றிவிழா கூட்டத்தை நடத்துவோம். தமிழ்நாடே இதை நோக்கித்தான் காத்து கொண்டு இருக்கிறது. மே 2-ந் தேதி தேர்தல் முடிவு வந்தவுடன் 234 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற்று இருக்கும்.தர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.