வேலூர் மாவட்டத்தில் 5¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
வேலூர் மாவட்டத்தில் 5¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்.
வேலூர்,
மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத்துறை சார்பில் ஆண்டு தோறும் தேசிய குடற்புழு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 5 வயது குழந்தைகளுக்கும், அரசு மற்றும் அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 19 வயதுள்ள அனைவருக்கும் மற்றும் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை அல்பெண்டசோல் வழங்கப்படும்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் என்று 5 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் வீடுகள் தோறும் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை வினியோகம் செய்தனர். பள்ளிகளுக்கு வராத மாணவர்களுக்கு வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரை 2 கட்டங்களாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.