வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.1,063 கோடிக்கு பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப் பட்டது.

Update: 2021-03-15 17:25 GMT
கடலூர், 

பொதுத்துறை வங்கிகள் சில தனியார் மயமாக்கப்படும் என்றும், எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்கப்படும் என்றும், வங்கித்துறையில் எந்த கட்டுப்பாடும் இன்றி அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் பணிக்கு செல்லவில்லை.

ஆர்ப்பாட்டம்

இதனால் பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில வங்கிகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயல்பட்டது. தொடர்ந்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் மீரா தலைமை தாங்கினார். மாவட்ட வங்கி ஊழியர் சங்க அவை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ராஜமாணிக்கம், மண்டல செயலாளர் செல்வக்குமார், காப்பீட்டு ஊழியர் சங்க மண்டல செயலாளர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பண பரிவர்த்தனை பாதிப்பு

இதில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். இது பற்றி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் மீரா கூறுகையில், மாவட்டத்தில் 13 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட 183 கிளை வங்கிகளில் பணியாற்றி வரும் 1750 வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளோம்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் மாவட்டத்தில் வங்கி பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை ரூ.1,063 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

பொதுமக்கள் அவதி

ஏற்கனவே கடந்த 13,14-ந் தேதிகளில் வங்கிகள் விடுமுறை என்பதால் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்