சாயல்குடி,
கடலாடி அருகே சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமையான ரதி முத்தம்மாள் தர்கா உள்ளது.இங்கு இந்து, முஸ்லிம் மக்கள் இணைந்து கந்தூரிவிழா நடந்தது. இதையொட்டி சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பின்பு தர்காவில் உள்ள ரதி முத்தம்மாள் மக்பராவில் புனித அக்தர் கலந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறை வடிவ பச்சை போர்வை போற்றப்பட்டு மல்லிகை பூ சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஜவ்வாது, சந்தனம், அக்தர் தெளிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.பின்பு கிடாய் மற்றும் சேவல் பலியிடப்பட்டு சமையல் செய்யப்பட்டு பனை ஓலை பட்டையில் கறிச்சோறு, பாரம்பரிய உணவு பொருட்கள் படைக்கப்பட்டு பொது அன்னதானம் வழங்கப்பட்டது.கடலாடி பகுதியில் சமுதாய நல்லிணக்க விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து, முஸ்லிம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.