மயிலாடுதுறையில் பரிதாபம் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு துக்கம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தந்தை தற்கொலை

மயிலாடுதுைறயில், குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவனது தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-15 16:00 GMT
வாசன் வினோத்குமார்
மயிலாடுதுறை:-
மயிலாடுதுைறயில், குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவனது தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

குளத்தில் மூழ்கினான்

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர்  வாசன் வினோத்குமார்(வயது 40). வீடியோ கிராபர். இவருடைய மனைவி சாரதா. இவர்களுடைய மகன்கள் சாலமன்(12), சாம்சன்(8). மகள் சாலமி(6). இவர்களில் சாம்சன் அருகே உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். 
நேற்று முன்தினம் மாலை சாம்சன் தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றான். அப்போது சாம்சன் மற்றும் அவனது நண்பர்கள் அருகில் இருந்த குளத்தில் இறங்கி குளித்தனர். குளத்தில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சாம்சன் குளத்தில் மூழ்கினான். 

பரிதாப சாவு

இதை கவனிக்காத அவரது நண்பர்கள் குளத்தில் குளித்து விட்டு வீடு திரும்பினர். விளையாட சென்ற தங்கள் மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் சாம்சனின் நண்பர்களிடம் தங்களது மகன் குறித்து கேட்டனர். அப்போது அவர்கள், தாங்கள் அனைவரும் ஒன்றாக குளிக்க சென்றதாகவும், தாங்கள் அனைவரும் திரும்பி விட்டதாகவும், சாம்சன் மட்டும் தங்களுடன் திரும்பி வரவில்லை என்றும் தெரிவித்தனர். 
இதனைத்தொடர்ந்து சாம்சன் குளித்த குளத்துக்கு சென்ற அவனது பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் குளத்தில் இறங்கி அவனை தேடினர். இது குறித்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று குளத்தில் இறங்கி சாம்சனை தேடினர். 

பிணமாக மீட்பு

நீண்ட நேர தேடுதலுக்கு பின் இரவு 8 மணியளவில் குளத்தில் இருந்து சிறுவன் சாம்சன் பிணமாக மீட்கப்பட்டான். விளையாட ெசன்ற தங்கள் மகன் பிணமாக மீட்கப்பட்டதை கண்ட அவனது பெற்றோர் கதறி அழுதனர். 
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த மயிலாடுதுறை போலீசார் சாம்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டில் அனைவரும் சிறுவன் உயிரிழப்பால் கதறி அழுது கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் ஒரு அறைக்குள் சென்ற வாசன் வினோத்குமார் தனது மகன் இறப்பை தாங்க முடியாமல்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
அறைக்குள் சென்ற வாசன் வினோத்குமார் நீண்டநேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் தூக்கில் வாசன் வினோத்குமார் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த மயிலாடுதுறை போலீசார், தற்கொலை செய்து கொண்ட வாசன் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அடுத்தடுத்து நடந்த இந்த துயர சம்பவம் அந்த குடும்பத்தினரை மட்டுமல்லாது அந்த பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்