கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயற்சி நடந்தது.
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயற்சி
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை திருவிழந்தூர் மெயின்ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பரிமள ரங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட கோவிலாகும். சம்பவத்தன்று இரவு பூட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோவிலில் மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளார். உண்டியலில் மர்ம நபர் கை வைத்தவுடன் அலாரம் அடித்துள்ளது. அலாரம் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் கோபி (வயது 58) மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.