கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் குளிர் சீசன் நிறைவடையும் சூழ்நிலையில் பகல் முழுவதும் வெப்பம் நிலவி வருகிறது. இருப்பினும் மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், புற்கள், புதர்கள் ஆகியவை கருகி வருகின்றன.
இதன் காரணமாக நேற்று காலை கொடைக்கானலில் வத்தலக்குண்டு மலைப்பாதையில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அப்பகுதியில் இருந்த மரங்கள், புதர்கள் கருகின. அத்துடன் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனிடையே கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த இரு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தால் கொடைக்கானலில் புகைமூட்டம் நிலவியது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.