வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Update: 2021-03-15 14:54 GMT

திண்டுக்கல்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல், பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அதேபோல் தேர்தல் அலுவலர்களும் வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடசந்தூர், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. 
அவை அனைத்தும் தனி அறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் உள்ளன.
இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 
இதன் ஒரு கட்டமாக மாதிரி வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை திண்டுக்கல் பஸ் நிலையம், ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தேர்தல் அலுவலர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது, தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பது போன்று இந்த மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் அலுவலர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். 
இதில் பொதுமக்கள் வாக்களிக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்