ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் மூடிக்கிடந்த வங்கிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கிகள் மூடக்கிடந்தன. இதனால் ரூ.500 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஊழியர்கள் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி நேற்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 400 வங்கி கிளைகள் செயல்படுகின்றன. இவற்றில் 1,500 அதிகாரிகள், 2 ஆயிரத்து 500 ஊழியர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களும் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் ஊழியர்கள் இல்லாமல் வங்கிகள் மூடப்பட்டு கிடந்தன.
ரூ.500 கோடி பரிவர்த்தனை
ஏற்கனவே சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால், நேற்று பண பரிவர்த்தனை செய்வதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர்.
ஆனால், நேற்று வேலைநிறுத்தத்தால் வங்கிகள் திறக்காததால் காசோலைகள், வரைவோலைகள் செலுத்துதல், பண பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியவில்லை.
மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.500 கோடி அளவில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை.
இதனால் அத்தியவசிய தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதற்கிடையே திண்டுக்கல் சாலை ரோட்டில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். அனைத்து வங்கி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
தேசிய வங்கி ஊழியர்கள் சங்க மண்டல செயலாளர் ஜோன்கிங்ஸ்டன் கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.