தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.650 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ரூ.650 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-03-15 12:17 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ரூ.650 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது.
வேலை நிறுத்தம்
மத்திய அரசு இரண்டு பொதுத்துறை வங்கிகளை இணைத்து தனியார் மயமாக்க முடிவு செய்து இருப்பதாகவும், இதனை கண்டித்தும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 132 வங்கி கிளைகளை சேர்ந்த 1,650 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ரூ.650 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிய வங்கி கணக்கு தொடங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பீச் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி நகர வங்கி ஊழியர் சங்க முன்னாள் தலைவர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். ஸ்டேட்வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் கெவின்ஸ்டன், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கமாரியப்பன், அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அன்டோ கில்பர்ட், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். சன்னாசி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்